< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பேன் - ஷிகர் தவான் பேட்டி
கிரிக்கெட்

'இந்திய அணிக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பேன்' - ஷிகர் தவான் பேட்டி

தினத்தந்தி
|
11 Aug 2023 4:28 AM IST

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது அதிர்ச்சி அளித்ததாக தவான் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம் பெறாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டேன். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

இந்திய அணிக்கு நான் திரும்புவதற்கு தயாராக இருப்பேன். அதனால் தான் உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு நான் தயார். கிரிக்கெட்டை நான் இன்னும் அனுபவித்து விளையாடுகிறேன். இதே போல் பயிற்சியிலும் உற்சாகமாக ஈடுபடுகிறேன். இவை எல்லாம் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களிடம் பேசவில்லை.

அடுத்த கட்டமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இதே போல் சயத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நம்மிடம் உள்ளது. அத்துடன் பரிச்சயமான மைதானம் மற்றும் சாதகமான உள்ளூர் சூழலில் நடப்பதால் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.'

இவ்வாறு தவான் கூறினார்.

மேலும் செய்திகள்