அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ஆஸ்திரேலியா..!! ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதல்
|ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மும்பை,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வி கண்டது. அதன் பிறகு இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்து பட்டையை கிளப்பியது. தொடர்ச்சியாக 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இன்னும் ஒரு வெற்றியை ருசித்தால் அரைஇறுதியை உறுதி செய்து விடும் நிலையில் உள்ளது.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அந்த அணி 4 வெற்றி (இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்துக்கு எதிராக), 3 தோல்வியுடன் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) 6-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.
வான்கடேயில் நடைபெற்ற முந்தைய லீக் 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கின்றன. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம். சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியாவே வெற்றி கண்டுள்ளது. இதில் உலகக் கோப்பையில் 2 முறை மோதியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் அல்லது லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது கேமரூன் கிரீன், கம்மின்ஸ் (கேப்டன்), மிடசெல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக் அல்லது நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.