< Back
கிரிக்கெட்
அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்குமா ஆப்கானிஸ்தான் அணி: நெதர்லாந்துடன் இன்று மோதல்
கிரிக்கெட்

அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்குமா ஆப்கானிஸ்தான் அணி: நெதர்லாந்துடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
3 Nov 2023 5:48 AM IST

ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க முடியும்.

லக்னோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க முடியும்.

ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி, ரமனுல்லா குர்பாஸ், ரஹமத் ஷா, இப்ராகிம் ஜட்ரனும், பந்து வீச்சில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமானும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டராக அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஜொலிக்கிறார்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபிரான்ட் இங்கில்பிரிட்டும், பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், ஆர்யன் தத், வான்டெர் மெர்வும், ஆல்-ரவுண்டர்களாக காலின் அகேர்மான், லோகன் வான் பீக், பாஸ் டி லீட்டும் வலுசேர்க்கிறார்கள்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 7 ஆட்டத்திலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ராம் அலிகில் அல்லது நஜ்புல்லா ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக் அல்லது நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், கேம்ஸ் ஓ டாவ்ட், வெஸ்லி பரேசி, காலின் அகேர்மான், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், இங்கில்பிரிட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.

மேலும் செய்திகள்