மும்பைக்கு எதிராக ரகானேவை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்..? சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் விளக்கம்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரகானே களமிறங்கினார்.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
முன்னதாக இப்போட்டியில் சி.எஸ்.கே. அணியின் தொடக்க வீரராக கேப்டன் ருதுராஜுக்கு பதிலாக ரகானே இறங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் மும்பையில் பிறந்த அவர் வான்கடே மைதானத்தை நன்றாக தெரிந்தவர் என்பதால் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டிருப்பார் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் கடந்த போட்டியிலேயே லேசான காயத்தால் விளையாடாத ரகானேவை இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற முடிவை எடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், "ரகானே லேசான காயத்தை கொண்டுள்ளார். எனவே தொடக்க வீரராக களமிறங்கினால் அது அவருக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் நன்றாக இருப்பதால் என்னால் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். மேலும் கேப்டனாக அது எனக்கான கூடுதல் பொறுப்பாகும்" என்று கூறினார்.