ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...இந்திய அணியில் அவர் ஏன் இடம் பெறவில்லை? - ஆகாஷ் சோப்ரா கேள்வி
|ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
மும்பை,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக இடம் பெறாததால் ரோகித் அணியை வழிநடத்துகிறார்.
மேலும், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய டி20 தொடரில் துணைக்கேப்டனாக செயல்பட்டார். அதேபோன்று தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் இடம்பெற்று விளையாடியிருந்தார். ஆனால் இப்படி திடீரென ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவரை அணியிலிருந்து நீக்கியது ஏன் என்று புரியவில்லை?.
அதேபோன்று ஷிவம் துபே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் இடம்பிடிக்காத அவர் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி இஷான் கிஷனை ஏன் தேர்வு செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.