கிரிக்கெட்
கோலி, ரோகித் இருவரும் துலீப் டிராபி தொடரில் ஏன் விளையாடவில்லை? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கோப்புப்படம் 

கிரிக்கெட்

கோலி, ரோகித் இருவரும் துலீப் டிராபி தொடரில் ஏன் விளையாடவில்லை? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

தினத்தந்தி
|
19 Aug 2024 7:24 PM IST

ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஒருவர் கவனமாக கையாளப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் துலீப் டிராபி கிரிக்கெட் - 2024 உள்ளூர் தொடர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. மொத்தம் 4 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் முன்னணி வீரர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் பெரும்பாலான இந்திய வீரர்கள் அத்தொடரில் விளையாட உள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் கோலி, ரோகித் உட்பட சீனியர் வீரர்கள் ஆடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் எதிர்வரும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு கோலி, ரோகித், பும்ரா ஆகியோருக்கு துலீப் டிராபி தொடரில் ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் துலீப் கோப்பையில் ஏன் விளையாடவில்லை? என்றும், அவர்கள் துலீப் கோப்பையில் ஆடாதது அவர்களுக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தேர்வாளர்கள் விராட் மற்றும் ரோகித்தை துலீப் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் அவர்கள் வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்குவார்கள். அவர்கள் இருவரும் துலீப் கோப்பை தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஒருவர் கவனமாக கையாளப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால் பேட்ஸ்மேன்கள் களத்தில் கொஞ்சம் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும்.

ஏனெனில் எந்த விளையாட்டிலும் வீரர்கள் 35 வயதை கடந்து விட்டால் தொடர்ச்சியாக விளையாடுவது தங்களது தரத்தை உயர்தரமாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் ஒரு நீண்ட இடைவெளி இருக்கும் போது தசைகள் பலவீனமடையும். அதனால் முந்தைய உயர்தரத்திற்கு திரும்புவது எளிதானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்