நீங்கள் ஏன் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றீர்கள்? - கோலியின் கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்
|விராட் கோலி - கம்பீர் இடையேயான சிறப்பு உரையாடல் நேற்று நடைபெற்றது.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007 (டி20), 2011 (ஒருநாள்) உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் கம்பீர் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் கம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கம்பீரிடம் நீங்கள் ஏன் புதிய பயிற்சியாளராக பதவி ஏற்றீர்கள்? பயிற்சியாளர் பதவி குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கம்பீர் கூறுகையில், "எனக்கு எப்பொழுதுமே சவால் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரராக இருக்கும்போது நான் பல சவால்களை கடந்து வந்துள்ளேன். தற்போது பயிற்சியாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறேன். விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட நான் இதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளராக சவாலையும் ஏற்றுக் கொண்டு என்னுடைய திறமையை வெளிப்படுத்த இந்த முடிவை நான் எடுத்துக் கொண்டேன். இந்திய அணி அடுத்ததாக பல ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறினார்.