< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராக இறங்கியது ஏன்..? - பியூஷ் சாவ்லா விளக்கம்

image courtesy: PTI

கிரிக்கெட்

ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராக இறங்கியது ஏன்..? - பியூஷ் சாவ்லா விளக்கம்

தினத்தந்தி
|
5 May 2024 9:13 AM IST

எங்கள் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அடைபட்டு விட்டதால் இனிமேல் நாங்கள் பெருமைக்காகவும், நற்பெயருக்காகவும் தான் விளையாட வேண்டும்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. 11-வது ஆட்டத்தில் ஆடி 8-வது தோல்வியை சந்தித்த மும்பை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முதல்முறையாக இம்பேக்ட் வீரராக களம் இறங்கி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்று வீரராக ஆடியது ஏன்? என்று விவாதம் கிளம்பியது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா அளித்த பேட்டியில் கூறியதாவது, ரோகித் சர்மா லேசான முதுகு பிடிப்பால் பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்பேக்ட் வீரராக களம் இறங்கி பேட்டிங் மட்டும் செய்தார். எங்கள் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அடைபட்டு விட்டதால் இனிமேல் நாங்கள் பெருமைக்காகவும், நற்பெயருக்காகவும் தான் விளையாட வேண்டும்.

20 ஓவர் போட்டி என்பது உத்வேகத்தை பொறுத்தது என்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த சீசனில் எங்களால் எந்த தருணத்திலும் உத்வேகத்தை பெற முடியவில்லை. அதுவே எங்களது மோசமான செயல்பாட்டுக்கு காரணமாகும்.

எங்களுக்கு மட்டுமல்ல இதுபோல் எந்த அணிக்கும் நடக்க தான் செய்யும். உத்வேகம் எங்கள் வழியில் அமையவில்லை. நெருக்கடியான தருணத்தில் மனிஷ் பாண்டே (42 ரன்), வெங்கடேஷ் அய்யருடன் (70 ரன்) இணைந்து ஆடிய விதம் அருமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்