< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; சிராஜ் 7 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியது ஏன்..? -  விளக்கம் அளித்த ரோகித் சர்மா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; சிராஜ் 7 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியது ஏன்..? - விளக்கம் அளித்த ரோகித் சர்மா

தினத்தந்தி
|
18 Sept 2023 9:19 AM IST

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக முகமது சிராஜ் 7 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியது ஏன்? என ரோகித் விளக்கம் அளித்துள்ளார்.

கொழும்பு,

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த முன்னணி வீரர்கள் அனைவரும் திரும்பினர். காயம் காரணமாக அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் ஒரே மாற்றமாக காயமடைந்த தீக்ஷனாவுக்கு பதிலாக துஷன் ஹேமந்தா இடம் பிடித்தார்.

'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 51 ரன்கள் இலக்கை இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது. இஷான் கிஷன் 23 ரன்னுடனும் (18 பந்து, 3 பவுண்டரி), சுப்மன் கில் 27 ரன்னுடனும் (19 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய சிராஜை தான் 10 ஓவர்கள் பந்துவீச வைக்க வேண்டும் என நினைத்ததாகவும், ஆனால் பயிற்சியாளரிடமிருந்து அவரை நிறுத்த வேண்டும் என செய்தி வந்ததாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அந்த ஸ்பெல்லில் சிராஜ் 7 ஓவர்கள் பந்து வீசினார். அவர் மேலும் பந்துவீச வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் அவரை நிறுத்த வேண்டும் என்று எங்கள் பயிற்சியாளரிடமிருந்து எனக்கு செய்தி வந்தது. அவர் பந்துவீச மிகவும் ஆசைப்பட்டார். அது ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரின் இயல்பு தான்.

அவர்கள் (பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர்) ஒரு அருமையான வாய்ப்பைப் பார்க்கும்போது, அதை பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அங்குதான் எனது வேலை வருகிறது. திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக அவர் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மேலும் அவர் 8-9 ஓவர்கள் வீசினார் என நான் நினைக்கிறேன்.

நான் ஆடுகளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர்கள் எப்படி பேட்டிங் செய்தார்கள், அதைப் பற்றி பேச முடியாது. நாங்கள் எப்படி பந்து வீசினோம் என்பது பற்றி மட்டுமே என்னால் பேச முடியும். மற்ற வீரர்களை விட சிராஜ் பந்தை சற்று அதிகமாக நகர்த்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்