சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? - பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா
|இரட்டை சதத்தை தவற விட்டதால் சச்சின் மிகவும் ஏமாற்றம் மற்றும் கோபத்துடன் இருந்ததாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மும்பை,
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2004-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 336 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 194 ரன்களை தொட்டு இரட்டை சதத்தை நெருங்கினார்.
ஆனால் 5 விக்கெட்டுகளை இழந்து 675 ரன்கள் அடித்திருந்தபோது அப்போட்டியில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ராகுல் டிராவிட் இந்தியாவின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆனால் அப்போட்டியில் சச்சின் 194 ரன்களில் இருந்தபோது ராகுல் டிராவிட் டிக்ளேர் செய்தது இன்று வரை சர்ச்சையாகவே இருக்கிறது. குறிப்பாக சச்சினின் இரட்டை சதத்தை தடுப்பதற்காக ராகுல் டிராவிட் வேண்டுமென்றே டிக்ளர் செய்ததாக இப்போதும் சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுவது வழக்கமாகும்.
இந்நிலையில் அப்போட்டியில் இரட்டை சதத்தை தவற விட்டதால் சச்சின் மிகவும் ஏமாற்றம் மற்றும் கோபத்துடன் இருந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அப்போட்டியில் நடந்த பின்னணிகளை சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-
"அப்போட்டியில் நானும் இந்திய அணியின் உடைமாற்றும் அறையில் இருந்தேன். ஆனால் அந்த உரையாடலில் நான் அங்கமாக இல்லை. உண்மையில் அதற்குள் நான் நுழையவும் விரும்பவில்லை. ஏனெனில் அப்போது அணியில் நான் மிகவும் ஜூனியராக இருந்தேன். ஆம் சச்சின் பாஜி அன்றைய நாளில் மகிழ்ச்சியாக இல்லை. முதல் முறையாக அப்போதுதான் அவரை அவ்வளவு மகிழ்ச்சியின்றி பார்த்தேன். பொதுவாக அவர் தன்னுடைய பொறுமையை இழக்க மாட்டார். அன்றைய நாளில் சச்சின் மகிழ்ச்சியாக இல்லை.
டிராவிட் அந்த முடிவை எடுத்தபோது கங்குலியும் இருந்தார். அவர் அப்போட்டியில் விளையாடாவிட்டாலும் அந்த முடிவை எடுப்பதில் ஒரு அங்கமாக இருந்திருப்பார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அது கேப்டனின் தனிப்பட்ட முடிவு கிடையாது. அப்போட்டி 4 நாட்களுக்குள் முடியும் என்று தெரிந்திருந்தால் டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று ராகுல் டிராவிட் போட்டியின் முடிவில் கூறினார். அந்த முடிவுக்காக டிராவிட் அழுத்தங்களை சந்தித்தார். ஆனால் அவருடைய முடிவை நீங்கள் சந்தேகிக்க முடியாது. ஒருவேளை நான் அவருடைய இடத்தில் இருந்திருந்தால் அதே முடிவை எடுத்திருப்பேன்" என்று கூறினார்.