ஆஸ்திரேலிய டி20 அணியின் புதிய கேப்டன் யார்..?
|ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச் நேற்று தனது ஓய்வை அறிவித்தார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், வெள்ளைநிற பந்து போட்டிக்கான கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் சென்ற ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். கடந்த அக்டோபர்-நவம்பரில் சொந்த மண்ணில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. அவரது பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் ஆரோன் பிஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இது குறித்து அவர் மெல்போர்னில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2024-ம் ஆண்டில் நடக்கிறது. அதுவரை என்னால் விளையாட முடியாது என்பதை உணர்ந்துள்ளேன். எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்குவதற்கு இதுவே உரிய நேரமாகும்.
இதன் மூலம் இன்னொருவர் தலைமையில் சரியான திட்டமிடலுடன் 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை நோக்கி அணி பயணிப்பதற்கு போதுமான காலஅவகாசம் கிடைக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவாக இருந்த ரசிகர்கள், எனது குடும்பத்தினர் குறிப்பாக மனைவி எமி மற்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2021-ம் ஆண்டில் முதல்முறையாக எனது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதே போல் 2015-ம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியிலும் அங்கம் வகித்தேன். இவ்விரு வெற்றிகளும், எனது வாழ்வில் மறக்க முடியாத மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும்.
ஆஸ்திரேலிய அணிக்காக 12 ஆண்டுகள் பங்கேற்றதுடன், பல மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியது மிகப்பெரிய கவுரவமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றாலும், பல்வேறு நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' என்றார்.
36 வயதான ஆரோன் பிஞ்ச் 146 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17 சதம் உள்பட 5,406 ரன்களும், 103 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 2 சதம், 19 அரைசதம் உள்பட 3,120 ரன்களும் சேர்த்துள்ளார். மேலும் 5 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 278 ரன்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச சாதனை பிஞ்ச் வசமே உள்ளது. அவர் 2018-ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 172 ரன்கள் (76 பந்து, 16 பவுண்டரி, 10 சிக்சர்) குவித்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 9 அணிகளுக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையும் பிஞ்சுக்கு உண்டு.
இந்நிலையில் பின்ச் ஓய்வுக்கு பின்னர் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் செயல்படுகிறார். அவர் மீது மேலும் ஒரு சுமையை திணிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த 20 ஓவர் போட்டி இனி ஆகஸ்டு மாதம் தான் உள்ளது. எனவே புதிய கேப்டனை நியமிப்பதில் கிரிக்கெட் வாரியம் அவசரம் காட்டாது. என்றாலும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, ஆஷ்டன் டர்னர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது.