200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும் அதே சமயம்... - குல்தீப் யாதவ் பேட்டி
|ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டெல்லி,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
சரியான லென்த்தில் பந்து வீசுவது மிகவும் முக்கியமாகும். டெத் ஓவர்களில் பவுலிங் செய்யும் போது அதுவே முதன்மையான சவாலாகும். தென்னாபிரிக்காவில் அவருக்கு (பெரீரா) எதிராக நான் விளையாடியுள்ளேன். எனவே அவர் பின்னங்காலில் அடிக்கக்கூடிய வீரர் என்பதை நான் அறிவேன்.
அதனால் புல்லாகவும் வேகமாகவும் பந்து வீசி அவரை முதல் பந்தில் அவுட்டாக்கினேன். பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை எப்படி கணிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் சில பந்துகளை வேகமாக வீசுவேன். அந்த வகையில் லென்த் தான் மிகவும் முக்கியம். அது தான் என்னுடைய திட்டமாகும்.
200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும். அதே சமயம் அது போன்ற போட்டிகளில் பவுலர்கள் விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே தொடர்ந்து நம்பிக்கை வைத்து என்னுடைய பலத்திற்கு நான் ஆதரவு கொடுக்க முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.