பிளே ஆப் செல்லும் கடைசி அணி எது...பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கான வாய்ப்புகள் என்னென்ன...?
|ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ அணிகள் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மும்பை,
16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இத்தொடரின் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று மும்பை, பெங்களூரில் நடைபெற உள்ளன. இதில் மும்பை-ஐதராபாத், பெங்களூரு-குஜராத் அணிகள் மோத உள்ளன.
இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் பிளே ஆப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இந்த பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை குஜராத், சென்னை, லக்னோ அணிகள் முன்னேறி உள்ளன. எஞ்சியுள்ள ஒரு பிளே ஆப் இடத்துக்கு முன்னேற பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற 3 அணிகளுக்கும் உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்,
1.) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (தரவரிசை - 4)
டி பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 13 லீக் ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பெங்களூரு தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்ப்பியனும், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்ள உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒரு வேளை இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மும்பை அணி தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை இரு அணிகளும் தோல்வி அடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும்.
தற்போதுள்ள பட்டியலில் ஆர்சிபி (+0.180) என்ற ரன்ரேட் உடன் மும்பை (-0.128), ராஜஸ்தான் (+0.148) நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2.) மும்பை இந்தியன்ஸ் (தரவரிசை - 6)
மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஐதராபாத்துக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும், ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும். இவ்வாறு நடந்தால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மும்பை அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பறிபோய்விடும்.
ஒருவேளை மும்பை, பெங்களூரு அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான அணி தேர்வு செய்யப்படும்.
3.) ராஜஸ்தான் ராயல்ஸ் (தரவரிசை - 5)
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் 7 வெற்றி, 7 தோல்வி பெற்றி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு மும்பை, பெங்களூரு அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைய வேண்டும்.
மேலும் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி மிகப்பெரிய தோல்விய தழுவினால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.