'பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டு தொடரில் மீண்டும் ஆடுவது எப்போது?'-இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி பதில்...!!
|ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
லாகூர்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆட்டத்தை பார்க்க 2 நாள் பயணமாக சென்று இருந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் அட்டாரி-வாகா எல்லை வழியாக நேற்று நாடு திரும்பினர்.
பாகிஸ்தான் பயணம் குறித்து ரோஜர் பின்னி அளித்த பேட்டியில்,
'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடனான சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் நல்ல விருந்தோம்பல் அளித்ததுடன் எங்களை சிறப்பாக நடத்தினர். கிரிக்கெட் ஆட்டத்தை பார்ப்பதுடன் அவர்களுடன் சில விஷயங்கள் குறித்து விவாதிப்பது எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அருமையான பயணமாகும்.
பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டு தொடரில் மீண்டும் ஆடுவது எப்போது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எதுவும் சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.