< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு எப்போது..? ஜெய் ஷா அளித்த தகவல்
கிரிக்கெட்

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு எப்போது..? ஜெய் ஷா அளித்த தகவல்

தினத்தந்தி
|
11 May 2024 5:53 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

மும்பை,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் அடுத்த சில நாட்களில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்க இருக்கிறோம். தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் (ஜூன்) முடிவடைகிறது. அவர் தொடர விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். புதிய பயிற்சியாளரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கலாம் என்று பார்க்கிறோம்.

இந்திய கிரிக்கெட்டில் வெவ்வேறு வடிவிலான அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. எங்களிடம் ரிஷப் பண்ட், விராட் கோலி, ரோகித் சர்மா போன்று அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். இறுதியாக இந்த விஷயத்தில் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிதான் முடிவு எடுக்கும். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் அமல்படுத்துவோம். அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளரை தேர்வு செய்தாலும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.

காலியாக இருக்கும் ஒரு தேர்வாளர் பதவிக்கான நபரை தேர்வு செய்ய ஏற்கனவே சில நேர்காணல்கள் நடைபெற்று இருக்கின்றன. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய தேர்வாளரை முடிவு செய்யும். அதனை நாங்கள் விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்