
image courtesy: AFP
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்போது? வெளியான தகவல்

டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐ.சி.சி.-க்கு சமர்ப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாளாகும்.
புதுடெல்லி,
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) சமர்ப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாளாகும். தொடக்க அணியில் வீரர்களை மே 25-ந் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அடுத்த மாதம் (ஏப்ரல்) கடைசி வாரத்தில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அந்த சமயத்தில் ஐ.பி.எல். போட்டி தொடரில் முதல் பாதி ஆட்டம் முடிந்து இருக்கும். அதில் வீரர்கள் விளையாடும் விதம் மற்றும் உடல் தகுதியை கவனத்தில் கொண்டு தேர்வாளர்கள் அணியை இறுதி செய்வார்கள் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். லீக் சுற்று முடிந்ததும் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் வீரர்களில் ஒரு பிரிவினர் நியூயார்க் சென்று பயிற்சியில் ஈடுபடுவார்கள். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் இறுதிப்போட்டி முடிந்ததும் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.