< Back
கிரிக்கெட்
ஆபரேஷனுக்கு பிறகு உடல் தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சியை தொடங்கினார் பும்ரா

image courtesy: BCCI twitter via ANI

கிரிக்கெட்

ஆபரேஷனுக்கு பிறகு உடல் தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சியை தொடங்கினார் பும்ரா

தினத்தந்தி
|
16 April 2023 4:14 AM IST

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆபரேஷனுக்கு பிறகு உடல் தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சியை தொடங்கினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார்.

இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது கடினம் தான். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பும்ரா மற்றும் முதுகு காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. டாக்டரின் ஆலோசனைபடி ஆபரேஷன் முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்