ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது - கவுதம் கம்பீர்
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சின் 68 ரன்கள் அடித்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இளம் வீரர் ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.
இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ' ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும். அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை" என்று கூறினார்.