இந்த போட்டியில் நாங்கள் நினைத்தது வேறு.. ஆனால் நடந்தது முற்றிலும் வேறு - வெற்றி குறித்து கே.எல்.ராகுல் கருத்து
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஜோகன்ஸ்பர்க்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி வெறும் 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கி இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் : 'இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு.. ஆனால் நடந்தது முற்றிலும் வேறு. இந்த போட்டியில் நான் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிக பிரமாதமாக இருந்தது. அவர்களது சிறப்பான பந்துவீச்சே இந்த வெற்றிக்கு காரணமாக நான் பார்க்கிறேன். நமது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பை வழங்கி இருந்தனர். இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்' என்று கூறினார்.