< Back
கிரிக்கெட்
பும்ரா குறித்து விராட் கோலி கூறியது உண்மைதான் - பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி
கிரிக்கெட்

பும்ரா குறித்து விராட் கோலி கூறியது உண்மைதான் - பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி

தினத்தந்தி
|
13 July 2024 9:56 AM GMT

உலகின் 8-வது அதிசயமான பும்ரா இந்தியாவுக்காக விளையாட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு மிக அருகே சென்றபோது, அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கை மாற்றி அமைத்தது.

அந்த வகையில் கை நழுவிச்சென்ற கோப்பையை மீண்டும் பெற்றுக்கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் பாராட்டியிருந்தார். மேலும் உலகின் 8-வது அதிசயமான பும்ரா இந்தியாவுக்காக விளையாட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி சொல்வது போல ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"பும்ராவுக்கு சொல்லிக் கொடுக்க பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமானால் அவருடன் பவுலிங் பயிற்சியாளராக நான் விரும்பி வேலை செய்தேன் என்று சொல்லலாம். பும்ரா நன்றாக செயல்படுவதற்கான பாராட்டுகளை நான் எடுத்துக் கொள்வதை விட சிறந்த விஷயம் இருக்க முடியுமா? ஆனால் நான் அந்த பாராட்டை எடுத்துக் கொள்ள மாட்டேன். விராட் கோலி கூறியதை போல அவர் தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய பவுலர்.

இந்தியா நிறைய பவுலர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் பும்ரா 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தலைமுறையின் ஒரு பவுலர். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய எந்த வகையான கிரிக்கெட்டிலும் அவர் நம்பர் 1. அற்புதமான நுணுக்கங்களை கொண்டுள்ள அவரிடம் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான திட்டங்கள் இருப்பதை பேசும்போது தெரிந்து கொண்டேன். சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் அவருக்கு பேட்ஸ்மேன்கள் எப்போது தம்மிடம் தடுமாறுகிறார்கள் என்பது தெரிகிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்