மயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - கேப்டன் ராகுல் கொடுத்த அப்டேட்
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலிடம் மயங்க் யாதவின் காயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது,
மயங்க் மிகவும் மோசமாக இல்லை. அவர் நன்றாக இருக்கிறார். நன்றாக உணர்கிறார். ஆனால் நாங்கள் அவரை அவசரப்படுத்த வேண்டாம் என்பதை விரும்புகிறோம். அவர் இளமையாக இருக்கிறார், அவரது உடலை நாம் பாதுகாக்க வேண்டும். அவர் இன்னும் 2 ஆட்டங்கள் கழித்து விளையாட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.