< Back
கிரிக்கெட்
தற்போது நடப்பது சோதனைதான்... அது சரியாக நடந்து விட்டால்... - சி.எஸ்.கே. பயிற்சியாளர்

image courtesy: twitter/@ChennaiIPL

கிரிக்கெட்

தற்போது நடப்பது சோதனைதான்... அது சரியாக நடந்து விட்டால்... - சி.எஸ்.கே. பயிற்சியாளர்

தினத்தந்தி
|
24 April 2024 4:37 PM IST

தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால்தான் தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இதுவரை 8 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது.

குறிப்பாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை, நடப்பு சீசனில் சொந்த மண்ணில் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதம் மற்றும் ஷிவம் துபேவின் அரைசதத்தின் உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார். அதனால் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு சி.எஸ்.கே. சரிந்துள்ளது.

இந்த வருடம் பேட்டிங் வரிசையில் நிலைத்தன்மை இல்லாதது சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால்தான் இது போன்ற கசப்பான தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

எனவே அது சரியாக நடந்து விட்டால் இதே வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் 2-வது பகுதியில் அபாரமாக விளையாடி வெற்றியில் பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இது பார்ம் மற்றும் காம்பினேஷனை கண்டறியும் முயற்சியின் கலவையாகும். சில பகுதிகளில் நாங்கள் சற்று அசவுகரியமாக உள்ளோம். அதற்காக விரைவான தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் 2-வது பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வீரர்களுக்கான கலவையை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.

டேரில் மிட்சேல் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கீழ் வரிசை பொருந்தவில்லை என்பதால் சர்வதேச அளவில் அசத்திய அவரை மேல் வரிசையில் இறக்கினோம். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் டாப் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இன்று அதை செய்த ருதுராஜ் தொடர்வார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் எங்களை வீழ்த்த எதிரணிகள் சிறப்பாக விளையாடுகின்றன. அதற்கு நாங்களும் கொஞ்சம் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்