தீபக் சஹார் காயத்தின் நிலை என்ன..? - சி.எஸ்.கே பயிற்சியாளர் பிளெமிங் பதில்
|ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோத உள்ளன. இந்த ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) கண்டு 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது.
லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ஆடிய டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.
சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் ஆடவில்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்திலாவது அவர் இடம் பெறுவாரா? மற்றும் அவரது காயத்தின் தன்மை என்ன என்பது குறித்து சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது,
தீபக் சஹாருக்கு பெரிய காயம் இல்லை. அதனால் கவலைப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். மும்பை அணிக்கு எதிராக ஷர்துல் தாக்கூர் நன்றாக பவுலிங் செய்ததால், தீபக் சஹார் வருகைக்கு அவசரம் காட்டவில்லை.
லக்னோ அணியை நாங்கள் சாதாரணமாக கருதவில்லை. நிச்சயம் லக்னோ அணி சிறந்த அணி தான். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செய்யும் விஷயங்களை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த விரும்புகிறோம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இன்னும் முன்னேற வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் சில விஷயங்களில் சரியாக இருக்கிறோம் என்று நம்பவில்லை. அப்படி நம்பினால் நிச்சயம் அதில் பிரச்சனை வரும். அதனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணியின் செயல்பாடுகளில் கூடுதல் முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. லக்னோ அணிக்கு எதிராக சவாலாக போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.