< Back
கிரிக்கெட்
தோனி களமிறங்கியபோது டி காக்கின் மனைவியை எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்... நடந்தது என்ன..?
கிரிக்கெட்

தோனி களமிறங்கியபோது டி காக்கின் மனைவியை எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்... நடந்தது என்ன..?

தினத்தந்தி
|
20 April 2024 1:09 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்தபோது தோனி களத்திற்கு வந்தார்.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவி இருந்தாலும் தோனியின் ஆட்டம் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் கடைசி 2 ஓவரில் களமிறங்கிய அவர் 28 (9 பந்துகள்) ரன்களை அடித்த அவர் அற்புதமான பினிஷிங் கொடுத்தார். அதை விட சென்னை அணிக்கு போட்டி நடக்கும் அனைத்து நகரங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போட்டியில் சேப்பாக்கமா அல்லது லக்னோவா என்று யோசிக்கும் அளவுக்கு தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து ஆதரவு கொடுத்தனர். அத்துடன் தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தபோது 124 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ரசிகர்கள் உச்சகட்ட ஆரவாரம் செய்து வரவேற்பு கொடுத்தனர்.

அந்த சமயத்தில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக்கின் மனைவி அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச் அவருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது. அந்த வாட்ச்சில் அதிக சத்தம் எழுந்தால் எச்சரிக்கும் தொழில்நுட்பம் இருந்தது.

தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தால் அவரது வாட்ச் அலறியது. அதை அவர் பார்த்தபோது 95 டெசிபல் அளவுக்கு ஒலி மாசு இருப்பதாக கூறியதோடு, இதே அளவிலான ஒலியை 10 நிமிடங்கள் கேட்டால் தற்காலிகமாக காது கேட்காமல் போக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

உண்மையில் தோனி களமிறங்கியபோது 124 டெசிபல் அளவுக்கு மைதானத்தில் சத்தம் எழுந்தது. அந்த வாட்ச் அனுப்பிய குறுந்தகவலை புகைப்படம் எடுத்து டி காக்கின் மனைவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்

மேலும் செய்திகள்