இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?
|இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
பல்லகெலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, நிஷாங்கா 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா சேசிங் செய்கையில் மழை வந்ததால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 22 ரன்களும் அடித்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6.3 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றிவிட்டது.
மேலும் புதிய கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "கிரிக்கெட்டின் எந்த வகையான பிராண்ட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி நாங்கள் தொடர் துவங்குவதற்கு முன்பே பேசினோம். இலக்கு சிறியதாக இருந்தாலும் நாங்கள் இந்த முறையை பின்பற்றித்தான் வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம். மழை பெய்வதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் 150 - 160 ரன்களுக்குள் சேசிங் செய்வது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இது போன்ற போட்டிகள் மிகவும் சாதுரியமாக இருப்பதை நாங்கள் பார்த்துள்ளோம்.
மழை எங்களுக்கு உதவியது. எங்களுடைய வீரர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். அடுத்த போட்டியின் பிளேயிங் லெவனில் எந்த மாதிரியான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றி நாங்கள் அமர்ந்து முடிவெடுக்க உள்ளோம். கொஞ்சம் அதிர்ஷ்டமும் உங்களை சுற்றி இருக்க வேண்டும். இப்போட்டியில் மழையின் வாயிலாக அதிர்ஷ்டம் எங்களுக்கு ஆசிர்வாதம் கொடுத்தது" என்று கூறினார்.