தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து சிராஜ் கூறியது என்ன ?
|தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் தடுமாற்றத்துடனே பேட்டிங்கை தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 153 ரன்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் அடுத்த 6 விக்கெட்டுகளை ரன் எதுவும் அடிக்காமல் இழந்து ஆல் அவுட் ஆனது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபடா, நிகிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து சிராஜ் கூறியதாவது,
அதிக ஸ்விங் இருக்கும் இதுபோன்ற ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்கள் பேராசையுடன் பல விஷயங்களை முயற்சி செய்வார்கள் .இது போன்ற நேரத்தில் பவுலிங் பார்ட்னர்ஷிப் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சில நேரங்களில், விக்கெட்டைப் பெற முயற்சிக்கும்போது ரன்கள் கசிந்துவிடும்.
அணிக்காக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் செய்த தவறுகளை உணர்ந்து சரி செய்து வெற்றியும் பெற்றேன். நீண்ட நேரம் பந்தை சரியான இடங்களில் வீசுவது எனது பலம், ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நேற்று , நான் எனது பலத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என தெரிவித்தார்.