< Back
கிரிக்கெட்
பாண்ட்யா என்ன தவறு செய்தார்..? கம்பீருக்கு முகமது கைப் கேள்வி
கிரிக்கெட்

பாண்ட்யா என்ன தவறு செய்தார்..? கம்பீருக்கு முகமது கைப் கேள்வி

தினத்தந்தி
|
19 July 2024 7:34 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் பல்லகெலேவிலும், ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்பிலும் நடைபெறுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு அணி பட்டியல் இறுதி செய்து வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத சூழ்நிலையில் குஜராத் அணிக்கு பாண்டியா ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்ததை மறந்து விட்டீர்களா? என முகமது கைப் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் துணை கேப்டன்ஷிப் பதவியை பறிக்கும் அளவுக்கு பாண்டியா என்ன தவறு செய்தார்? என்றும் கைப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 வருடங்கள் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பை வென்ற குஜராத் இரண்டாவது வருடம் 2-வது இடம் பிடித்தது. அதேபோல சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அனுபவம் கொண்டுள்ளார். டி20 உலகக்கோப்பையில் அவர் துணைக்கேப்டனாக இருந்தார். தற்போது புதிய பயிற்சியாளர் வந்துள்ளதால் திட்டம் புதிதாக இருக்கிறது. சூர்யகுமார் நல்ல வீரர். நம்பர் 1 டி20 வீரரான சூர்யா கேப்டன்ஷிப் பொறுப்பை தோளில் சுமப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால் அவர்கள் பாண்ட்யாவுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அனுபவமிக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளரான கம்பீர் கிரிக்கெட்டை நன்றாக தெரிந்தவர். இருப்பினும் கேப்டன்ஷிப் பெற முடியாத அளவுக்கு பாண்ட்யா எந்த தவறும் செய்யவில்லை. இளம் வீரர்களை வைத்து புதிய ஐபிஎல் அணிக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்வது மிகப்பெரியது. ஜீரோவிலிருந்து வேலை செய்த அவர் குஜராத்தை வெற்றி பெற வைத்தார். எனவே அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்