'பயிற்சியாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்?' - பிரித்வி ஷாவை தேர்வு செய்யாதது ஏன்? - கவுதம் கம்பீர் கேள்வி
|இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்
அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர்.
தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல.
அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரித்வி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். சொல்லப்போனால் அவர் இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும். நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும்.
அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரித்வி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.