வெஸ்ட் இண்டீஸ் தொடர்; புஜாராவுக்கு பதிலாக இளம் வீரர்..ஒருநாள், டி20-க்களில் சஞ்சு சாம்சன் - வெளியான தகவல்...?
|இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்ப்யன்ஷிப் தோல்விக்கு பின்னர் கிட்டத்தட்ட இந்திய அணி 1 மாத ஓய்வுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் இந்திய அணியில் நம்பர் 3ம் வரிசையில் ஆடி வரும் புஜாராவுக்கு பதிலாக இளம் ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் புஜாராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் கிடைக்கவில்லை என்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை என்னவாகும் என ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
மேலும் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.