நாக்பூர் டெஸ்ட் கணிப்பு: வர்ணனையாளர்கள் காரசார மோதல்
|இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் தொடங்கியுள்ள முதலாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் வர்ணனையாளர் அரங்கில் அனல் பறந்தது.
நாக்பூர்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னில் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர், ஷமியின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள், ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் 36 ரன்களில் வெளியேறினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும் (69 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் தொடங்கியுள்ள முதலாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் களத்தில் மோதல் நடந்ததோ இல்லையோ வர்ணனையாளர் அரங்கில் அனல் பறந்தது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வர்ணனை செய்த இந்தியாவின் தினேஷ் கார்த்திக், 'தற்போதைய எனது கணிப்பு, இந்த டெஸ்டில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்யும் (அதாவது இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்பதை மனதில் வைத்து) என்பது தான்' என்றார்.
உடனே குறுக்கிட்ட மற்றொரு வர்ணனையாளர் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக், 'ஓ.... அப்படியா கார்த்திக்... பார்த்து விடலாம்' என்று பதில் கொடுத்தார்.
தனது கருத்தில் பின்வாங்காத கார்த்திக் 'எனது கணிப்பு இது தான்' என்று மீண்டும் உறுதிப்பட கூறினார். அதற்கு மார்க்வாக் 'இரு அணியினரும் பேட் செய்து முடிக்காத வரை ஆடுகளத்தன்மை குறித்து கணிக்க முடியாது. ஆட்டத்தின் போக்கு எப்படி நகருகிறது என்பதை பார்க்கலாம். ஆஸ்திரேலியர்கள் எளிதில் விட்டுவிடமாட்டார்கள். சில ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் போன்று இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் கிடையாது. எங்களிடம் சராசரி 60 ரன் வைத்துள்ள இருவர் உள்ளனர்' என்றார்.
இந்த காரசார உரையாடலில் இணைந்த மற்றொரு வர்ணனையாளர் இந்தியாவின் ரவிசாஸ்திரி, 'மார்க்.... உங்களது ஒரு கணிப்பை நினைவூட்டுகிறேன். 2020-ம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் ஆல்-அவுட் ஆன போது அந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் வெல்லப்போகிறது என்று கூறுனீர்கள். ஆனால் நடந்தது (2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி) என்ன? , இந்த மாதிரியே உங்களது கணிப்பு தொடரட்டும்' என்று கிண்டலடித்தார்.