< Back
கிரிக்கெட்
அவரை அமைதியாக்கி இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் - கம்மின்ஸ் நம்பிக்கை
கிரிக்கெட்

அவரை அமைதியாக்கி இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் - கம்மின்ஸ் நம்பிக்கை

தினத்தந்தி
|
23 Sept 2024 8:51 PM IST

ரிஷப் பண்ட் போல தங்களுடைய அணியிலும் டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் இருப்பதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வங்காளதேச டெஸ்ட் தொடரில் சதமடித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் போல தங்களுடைய அணியிலும் இந்தியாவை அடித்து நொறுக்க டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை 2023 உலகக் கோப்பை பைனலில் மொத்த இந்தியாவையும் சைலன்ட் செய்தது போல ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்து வெற்றி பெறுவோம் என்று கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒவ்வொரு அணியிலும் போட்டியை அதிரடியாக எடுத்துக் கொள்ளக் கூடிய சில வீரர்கள் இருப்பார்கள். அது போல எங்களிடம் டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் உள்ளனர். அவர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை கொஞ்சம் தவற விட்டாலும் அவர்களைப் போன்றவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள்.

ரிஷப் பண்ட் போன்றவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை விளையாட கூடியவர். அது அற்புதமான ஒன்று. அது அவருடைய அங்கம். சொல்லப்போனால் இப்போதெல்லாம் அது போன்ற ஷாட்டுகள் சாதாரணமாகி விட்டது. கடந்த 2 தொடர்களில் ரிஷப் பண்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனவே இம்முறை அவரை நாங்கள் அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்