கிரிக்கெட்
உங்களுடைய சிரிப்பை தவற விடுவோம் ஷிகர் - விராட் கோலி உருக்கம்

image courtesy: AFP

கிரிக்கெட்

உங்களுடைய சிரிப்பை தவற விடுவோம் ஷிகர் - விராட் கோலி உருக்கம்

தினத்தந்தி
|
25 Aug 2024 10:31 AM GMT

ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் (38 வயது) சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 222 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான் இந்திய அணிக்காக பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி இருந்தார்.

அதன் பின்னர் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்வால், இஷன் கிஷான் போன்ற இளம் வீரர்களின் வருகையால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடைபெறும் ஷிகர் தவானுக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் ஷிகர் தவானுக்கு விராட் கோலி உருக்கமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

"ஷிகர் தவான், அறிமுக போட்டியில் பயமின்றி விளையாடியது முதல் இந்தியாவின் தொடக்க வீரராக செயல்பட்டது வரை நீங்கள் எங்களுக்கு எண்ணற்ற நினைவுகளை கொடுத்துள்ளீர்கள். இந்த விளையாட்டின் மீதான உங்களுடைய ஆர்வம், உங்களுடைய நேர்மைத்தன்மை, உங்களுடைய சிரிப்பு ஆகியவற்றை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்களுடைய மரபு எப்போதும் வாழும். எப்போதும் இதயத்திலிருந்து முன்னோக்கி வந்து மறக்க முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றிகள். களத்திற்கு வெளியே உங்களுடைய அடுத்த இன்னிங்சுக்கு வாழ்த்துகள் கப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்