< Back
கிரிக்கெட்
நெருக்கடி இல்லாமல் விளையாடுங்கள் - இந்திய வீரர்களுக்கு ரோகித் சர்மா வேண்டுகோள்
கிரிக்கெட்

நெருக்கடி இல்லாமல் விளையாடுங்கள் - இந்திய வீரர்களுக்கு ரோகித் சர்மா வேண்டுகோள்

தினத்தந்தி
|
5 Oct 2023 3:14 AM IST

நெருக்கடியை ஒதுக்கிவிட்டு ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

கேப்டன்கள் சந்திப்பு உரையாடலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

உலகக் கோப்பை போட்டி என்பது ஒரு நீண்ட தொடராகும். எனவே பின்னால் வரும் போட்டிகளை பற்றி எல்லாம் இப்போதே நினைத்து கொண்டிருக்கக்கூடாது. ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். எதிர்பார்ப்புகள், நெருக்கடி பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் நெருக்கடி எப்போதும் இருக்கத்தான் செய்யும். யார் விளையாடுகிறார்கள், முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நெருக்கடியை ஒதுக்கிவிட்டு ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

இந்தியா அல்லது வெளிநாட்டில் எங்கு விளையாடினாலும் உருவாகும் அழுத்தத்தை கடந்து செல்ல எங்களது வீரர்கள் பழகி விட்டனர். ஒரு விளையாட்டு வீரராக விளையாடும் காலம் வரை நெருக்கடி நம்மை விட்டு விலகப் போவதில்லை. எனவே அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நமது பணி என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நெருக்கடியை மறந்து விடுங்கள் என்று சொல்வது எளிது. அதை செய்வது கடினம். ஆனால் நாங்கள் உண்மையிலேயே நன்றாக தயாராகி உள்ளோம். சிறப்பாக தயாராகும் பட்சத்தில், எந்த ஒரு ஆட்டத்திற்கு செல்லும் போதும் நிறைய நம்பிக்கையை தரும்.

உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி கடன்பட்டுள்ளேன். கடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளில் போட்டியை நடத்திய நாடே வென்றுள்ளது என்ற வரலாறு குறித்து நான் அதிகமாக யோசிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை களத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். போட்டியை ரசித்து அனுபவித்து விளையாடுவோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்