ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம் - பி.சி.சி.ஐ. செயலாளர் நம்பிக்கை
|இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.
அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காகவே ஜஸ்பிரித் பும்ரா, ரோகித், விராட் கோலி ஆகியோருக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். அத்துடன் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து பிட்டாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை அனுபவமிக்க இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஜெய் ஷா பேசியது பின்வருமாறு:- "எங்களுடைய அணி அந்தத் தொடருக்காக நன்றாக தயாராகியுள்ளது. நாங்கள் நீண்ட காலமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். முகமது ஷமியும் பிட்டாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர்களும் பிட்டாக உள்ளனர். எனவே இது மிகவும் அனுபவமிக்க இந்திய அணி. நாங்கள் நிச்சயம் அங்கே வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.