நாங்கள் கண்டிப்பாக அரையிறுதியில் விளையாடுவோம் - வங்காளதேச வீரர் நம்பிக்கை
|இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற எங்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும்.
ஆண்டிகுவா,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்நிலையில் நாங்கள் கண்டிப்பாக அரையிறுதியில் விளையாடுவோம் என வங்காளதேச வீரர் தஸ்கின் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயமாக, எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இங்கே விக்கெட் நன்றாக இருக்கிறது. ஆனால் வெற்றி எளிதில் வராது. அடுத்த போட்டியில் (இந்தியாவுக்கு எதிராக) நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பில் இருப்போம்.
மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக நடக்கவில்லை என்றால் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். நாங்கள் எங்களுடைய கடைசி போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேற முயற்சி செய்வோம். துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.
ஆஸ்திரேலியா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. அடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நாங்கள் வாய்ப்புகளை மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறோம்.இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்பட வேண்டும்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தால் எங்கள் அரையிறுதி நம்பிக்கை சிதைந்து விடும். எனவே இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற எங்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.