< Back
கிரிக்கெட்
அரைஇறுதியில் சூர்யகுமாரின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை
கிரிக்கெட்

'அரைஇறுதியில் சூர்யகுமாரின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்' - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை

தினத்தந்தி
|
9 Nov 2022 2:17 AM IST

அரைஇறுதி ஆட்டத்தில் சூர்ய குமாரின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.

விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.

ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்."

இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

மேலும் செய்திகள்