கிரிக்கெட் போட்டி மூலம் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவோம் - ஆரோன் பிஞ்ச் நம்பிக்கை
|கிரிக்கெட் போட்டி மூலம் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கைக்கு சென்றுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்ததும் அங்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இதற்கு மத்தியில் நடக்கும் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், 'நாங்கள் இலங்கை மண்ணில் கிரிக்கெட் விளையாட உள்ளோம். இதன் மூலம் அந்த நாட்டு மக்கள் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறப்பு வாய்ந்த ஒரு இடம் இலங்கை. இங்கு அளிக்கப்படும் வரவேற்பும், நட்புறவுடன் பழகும் மக்களும், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான அவர்களின் ஆர்வமும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்' என்றார்.
மேலும் பிஞ்ச் கூறுகையில், 'இலங்கை அணியின் டாப் வரிசையை எடுத்துக் கொண்டால் குசல் மென்டிஸ் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். அவருக்குரிய நாளாக அமைந்து விட்டால் பந்துவீச்சை நொறுக்கி விடுவார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கடந்த சில ஆண்டுகளாக 20 ஓவர் கிரிக்கெட்டில் வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார். நாங்கள் இலங்கைக்கு எதிராக ஒரு சில நெருக்கமான தொடர்களில் விளையாடி உள்ளோம். இலங்கை மிகவும் அபாயகரமான ஒரு அணி' என்றும் குறிப்பிட்டார்.