குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் - பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் கருத்து
|நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன்.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி குஜராத் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் தெவேடியா 36 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 - 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன்.
பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம். அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் இது போன்று தொடர்ந்து போட்டிகளை தோற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.