அவரை நாங்கள் டி20 வீரராக மட்டுமே பார்க்கிறோம் - அகர்கர்
|ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் ஐயர், ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பதால் சூர்யகுமாருக்கான தேவையில்லை என்று அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பையில் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாண்ட்யாவை கழற்றி விட்டுள்ள அவர் சூர்யகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். எதிர்வரும் இலங்கை டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் அதே சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சூர்யகுமாரை டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக தெரிவிக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான வாய்ப்பு முடிந்ததாக மறைமுகமாக அறிவித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பதால் சூர்யகுமாருக்கான தேவையில்லை என்றும் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சூர்யகுமாரை தேர்ந்தெடுப்பது பற்றி தற்போதைய நிலைமையில் நாங்கள் விவாதிக்கவில்லை. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் மீண்டும் வந்துள்ளனர். ரிஷப் பண்ட்டும் வந்துள்ளார். அவர்களால் நமது மிடில் ஆர்டரில் தேவையான தரம் இருக்கிறது. எனவே தற்சமயத்தில் சூர்யகுமாரை டி20 வீரராக பார்க்கிறோம். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அதைப் பற்றி நல்ல மூளையையும் கொண்டுள்ளதால் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.