< Back
கிரிக்கெட்
இதன் காரணமாகதான் தோல்வியை சந்தித்தோம் - சி.எஸ்.கே கேப்டன் கெய்க்வாட் பேட்டி

Image Courtesy: X (Twitter)

கிரிக்கெட்

இதன் காரணமாகதான் தோல்வியை சந்தித்தோம் - சி.எஸ்.கே கேப்டன் கெய்க்வாட் பேட்டி

தினத்தந்தி
|
24 April 2024 7:21 AM IST

உண்மையை சொல்ல வேண்டுமெனில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் போதே பனியின் தாக்கத்தை நாங்கள் பார்த்தோம்.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இது விழுங்க வேண்டிய கடினமான மாத்திரையாகும். இது நல்ல போட்டியாக அமைந்தது. கடைசி நேரத்தில் லக்னோ சிறப்பாக விளையாடியது. நாங்கள் 13 - 14 ஓவர்கள் வரை போட்டியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் ஸ்டோய்னிஸ் மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார்.

பனி தன்னுடைய வேலையை செய்தது. அது அதிக அளவில் இருந்ததால் எங்களுடைய ஸ்பின்னர்களை போட்டியிலிருந்து வெளியே எடுத்தது. ஒருவேளை அது இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிக கட்டுப்பாட்டை வைத்து போட்டியை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்றிருப்போம். ஆனால் இது போட்டியின் ஒரு அங்கமாகும். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் ஜடேஜா முன்கூட்டியே பேட்டிங் செய்தார். பவர் பிளே முடிந்ததும் விக்கெட் விழுந்தால் துபே பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பது எங்களுடைய எண்ணமாகும். அதற்காக ஒருவரை நீங்கள் அவுட்டாகுமாறு வற்புறுத்த முடியாது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் போதே பனியின் தாக்கத்தை நாங்கள் பார்த்தோம். லக்னோ பேட்டிங் செய்த விதத்திற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்