நாங்கள் செய்த தவறுகள்தான் தோல்விக்கு காரணம் - ஜிம்பாப்வே கேப்டன் பேட்டி
|இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து உலக சாம்பியனை போல் விளையாடி இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளதாக ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா பாராட்டியுள்ளார். அத்துடன் அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்சை தவற விட்டது தோல்விக்கு காரணமானதாகவும் அவர் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதேபோல பேட்டிங்கில் டாப் ஆர்டர் அதிரடியாக விளையாடாதது தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"உலக சாம்பியன் ஆன இந்தியா உலக சாம்பியன்போல் விளையாடியது. கேட்ச்களை தவற விட்டது இன்று எங்களுக்கு வேதனையை கொடுத்தது. இந்த பிட்ச்சில் 200 ரன்கள் அடிக்க முடியும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா அதையும் தாண்டி 30 ரன்கள் எக்ஸ்ட்ராவாக எடுத்தது. சேசிங்கில் இது நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் எங்களுடைய டாப் ஆர்டர் நெருப்பாக விளையாடவில்லை. பிளஸ்ஸிங் முசர்பானி வேகமாக வளர்ந்து வருகிறார். அவருடைய செயல்பாடுகளின் வரைபடம் தொடர்ந்து உயரும். இது நாங்கள் நீண்ட நாட்களாக பேசிக் கொண்டிருக்கும் வேலை. இன்று கொஞ்சம் நாங்கள் நேர்மறையான ஷாட்டுகளை விளையாடினோம். இருப்பினும் அனுபவமின்மையால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது" என்று கூறினார்.