< Back
கிரிக்கெட்
இந்த சீசனில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

Image Courtesy: X (Twitter)

கிரிக்கெட்

இந்த சீசனில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

தினத்தந்தி
|
12 May 2024 8:26 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் இந்த ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் சால்வா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 17 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஆட்டம் முடிந்த பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய மும்பை கேப்டன் பாண்ட்யா கூறியதாவது, எங்களுடைய பேட்டிங் யூனிட்டில் இருந்து தொடக்கத்தில் நல்ல வலுவான அடித்தளம் கிடைத்தது. ஆனால் நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டு விளையாடவில்லை. ஆடுகளம் கொஞ்சம் மேலும் கீழுமாக இருந்தது.

இப்படியான ஆடுகளத்தில் மொமண்டத்தை தக்க வைப்பது முக்கியம். பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் இதை சேசிங் செய்யக்கூடிய ரன்கள் என்று நினைத்தேன். மைதானம் எல்லையில் இருந்து பந்து வரும் ஒவ்வொரு முறையும் ஈரமாகியே திரும்பி வருகிறது.

அதே சமயத்தில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கான உறுதியை கொடுத்தார்கள். அடுத்த ஆட்டம் குறித்து எந்த எண்ணமும் கிடையாது. நாங்கள் ஐ.பி.எல் தொடரின் ஆரம்பம் முதலே நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். ஆனால் நாங்கள் விரும்பிய முறையில் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்