விராட் கோலியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் அவரை நான் மதிக்கிறேன் - பாகிஸ்தான் வீரர்
|பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
டப்ளின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பகார் ஜமான் 78 ரன், ரிஸ்வான் 75 ரன் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த முகமது ரிஸ்வானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பின் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் என்ற உலக சாதனையை ரிஸ்வான் படைத்தார். அதுபற்றி போட்டியின் முடிவில் ரிஸ்வானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
நான் எப்போதும் நம்பர்களை பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் சராசரியை பார்த்தால் நீங்கள் ஒரு சராசரியான வீரர். போட்டியின் சூழ்நிலை மற்றும் கால சூழ்நிலைகளை பார்த்து விளையாடுவதே சிறப்பாகும். விராட் கோலி சிறந்த வீரர். நாங்கள் அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளோம். அவரை நான் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.