நாங்கள் கடைசி வரை கடுமையாக போராடினோம்; தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து
|இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 53.5 ஓவர்களில் 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் இணைந்த பிறகு இங்கிலாந்து இழந்த முதல் டெஸ்ட் தொடர் இதுதான். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இது ஒரு சிறந்த போட்டி என்று நினைக்கிறேன். இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அது ஒட்டுமொத்த ஆட்டத்தின் பிரதிபலிப்பாக இருக்காது. ஏனெனில் அவர்கள் எளிதாக வெற்றி பெற்று விடவில்லை. இதை அவர்களே ஒப்புக் கொள்வார்கள். நாங்கள் கடைசி வரை கடுமையாக போராடினோம்.
அணியை நினைத்தால் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. குறிப்பாக சோயிப் பஷீர், ஹார்ட்லீயை பாராட்டியாக வேண்டும். அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர்கள். ஆனாலும் அவர்கள் வெளிப்படுத்திய முயற்சி என்னை பெருமைப்பட வைக்கிறது. அவர்களிடம் இருந்து இதை விட அதிகமாக எதிர்பார்க்க முடியாது.
என்னுடைய கேப்டன்ஷிப்பில் இளம் வீரர்களுக்கு சுதந்திரம் அளித்து, சவாலான சூழல்களில் விளையாட அனுமதிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகன் நான். இரு அணியிலும் நிறைய இளம் வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.