'நாங்கள் அவரை இழக்க விரும்பவில்லை'; கடைசி கட்டத்தில் தோனி களம் இறங்குவது குறித்து விளக்கம் அளித்த பிளெமிங்
|இந்த தொடரில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும்.
அதேவேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்த சென்னை அணி முயற்சிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து பேட்டி அளித்த சி.எஸ்.கே பயிற்சியாளரிடம் தோனி கடைசி கட்டத்தில் பேட்டிங் இறங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிளெமிங் கூறியதாவது, நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது கொஞ்சம் ரிஸ்க். நாங்கள் அவரை இழப்பதற்கான ரிஸ்கில் உள்ளோம்.
எனவே அவர் கடைசி நேரத்தில் வந்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சமநிலையை நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம். அந்த வேலையில் அவரும் சிறப்பாக செயல்படுகிறார். தசையில் ஏற்பட்ட சிறிய காயத்தால் பெரிய பிரச்சினை இல்லை என்று ஏற்கனவே நான் தெளிவாகச் சொல்லி விட்டேன். ஆனாலும் அது தொடர்ந்து செய்தியாக்கப்படுகிறது.
கடந்த வருடம் முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அவர் குணமடைந்த போது அவரது பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இருந்தது. எங்களின் சவால்களில் ஒன்றாக எங்களுக்கு நல்ல பேக்-அப் கீப்பர் கிடைத்துள்ளார். ஆனால் அவர் எம்.எஸ். தோனி இல்லை.
எனவே கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் (தோனி) பேட்டிங் செய்வதை நாங்கள் விரும்புகிறோம். பேட்டிங், கீப்பிங் ஆகியவற்றுடன் அவர் புதிய கேப்டனுடன் தனது ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதும் முக்கியம். எனவே எங்களுக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கடைசி நேரத்தில் களமிறக்கி அவரை பாதுகாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.