பேட்டிங்கின் போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை - ஷிகர் தவான் பேட்டி
|இளம் வீரர்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த போட்டியில் ஷசாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா மிகச் சிறப்பான இன்னிங்சை விளையாடி இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது சிறப்பான ஒன்று. ஆனால் நாங்கள் பேட்டிங்கின் போது முதல் ஆறு ஓவர்களில் சரியாக விளையாடவில்லை.
பவர்பிளேவிற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் அது கடைசி நேரத்தில் பாதிப்பாக அமைந்தது. இந்த பிட்ச்சில் பவுன்ஸ் இல்லாததால் பந்தினை கணித்து விளையாட முடியாமல் போனது. அதேபோன்று போட்டியின் கடைசி பந்தில் கேட்சை தவறவிட்டோம்.
அதுமட்டுமின்றி பீல்டிங்கின் போது 10 முதல் 15 ரன்களை குறைத்திருக்கலாம். இது போன்ற சில தவறுகளால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது. இருந்தாலும் இளம் வீரர்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.