கண்டிப்பாக நாங்கள் அதில் முன்னேற வேண்டும் - தோல்விக்கு பின் இலங்கை கேப்டன் வருத்தம்
|இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது.
பல்லகெலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, நிஷாங்கா 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா சேசிங் செய்கையில் மழை வந்ததால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 22 ரன்களும் அடித்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6.3 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றிவிட்டது.
மறுபுறம் புதிய கேப்டன் அசலங்கா தலைமையிலும் இலங்கை சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் முதல் போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் கடைசி 5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே தோல்விக்கு காரணமானதாக இலங்கை கேப்டன் அசலன்கா தெரிவித்துள்ளார். மேலும் மழை வந்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியதாக வருத்தத்துடன் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"நான் உட்பட மிடில், லோயர் மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் நாங்கள் வெளிப்படுத்திய பேட்டிங் ஏமாற்றமாக அமைந்தது. கண்டிப்பாக நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங்கில் முன்னேற வேண்டும். இந்த பிட்ச்சில் பந்து பழையதாகும்போது பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிறது. ஆனால் தோல்விக்கு அது காரணமல்ல. சர்வதேச வீரர்களான நாங்கள் வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் பேட்டிங்கில் எங்களுடைய அணுகுமுறையில் முன்னேற்றம் காண வேண்டும்.
இப்போட்டியில் நாங்கள் 15 - 18 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக மழையும் எங்களுக்கு எதிராக விளையாடியது. இருப்பினும் அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. மழையால் வெளிப்புற களங்கள் ஈரமாக இருந்ததால் 8 ஓவர்கள் கொண்ட போட்டியில் எதிரணி வெல்வது எளிது" என்று கூறினார்.