பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருக்கலாம் - சரித் அசலங்கா
|இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
பல்லகெலே,
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 214 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் இலங்கை கேப்டன் சரித் அசலங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலில் பந்துவீசும் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. ஆனால் அதன் பின் ஒரு கட்டத்தில் இந்தியா 240 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் நாங்கள் மிகவும் வலுவாக கம்பேக் கொடுத்தோம். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருக்கலாம்.
குறிப்பாக மிடில் ஆர்டரில் வெளிப்படுத்திய பேட்டிங் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது. எங்களுடைய அணியில் தற்போது சோதனை முயற்சிகளை செய்து வருகிறோம். எனவே அதைப் பின்பற்றி நாங்கள் வருங்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.