எங்களால் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - அமெரிக்க வீரர் நம்பிக்கை
|அமெரிக்க அணி முறையாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டால், உலகின் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என்று ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. முதல் முறையாக ஐ.சி.சி. தொடரில் களம் இறங்கிய அந்த அணி பலம் வாய்ந்த இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடங்கிய ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த போதிலும், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அணி முறையாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டால், உலகின் எந்த ஒரு அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் துணை கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, "சூப்பர் 8 சுற்றில் வரவிருக்கும் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். கடந்த 2 வாரங்களாக எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களால் எந்த ஒரு நாட்டின் முழுமையான அணியையும் வீழ்த்த முடியும் என்பதை காட்டியுள்ளோம்.
நேர்மையாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க கிரிக்கெட்டுக்கு பலரும் பெரிதாக கவனம் கொடுக்கவில்லை. நாங்கள் எந்த அளவுக்கு சிறந்த வீரர்கள் என இந்த உலகுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு விதத்தில் எங்களுக்கு சாதகமாக இருந்தது. முறையாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டால், எங்களால் உலகின் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என கூறினார்.