இந்தியா எந்த திட்டத்துடன் வந்தாலும் தோற்கடிக்க நாங்கள் தயார் - மார்க் வுட்
|இந்தியா அடுத்த போட்டியில் இன்னும் அதிகமாக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச்சை தயாரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்க் வுட் கூறியுள்ளார்.
ஐதராபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட அபாரமாக செயல்பட்டு 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் 2வது இன்னிங்சில் ஒல்லி போப் 196 ரன்கள் அடித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் சொன்னது போலவே முதல் போட்டியில் தங்களுடைய அணி வென்றுள்ளதால் இந்தியா அடுத்த போட்டியில் இன்னும் அதிகமாக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச்சை தயாரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்க் வுட் கூறியுள்ளார். இருப்பினும் எந்த திட்டத்துடன் வந்தாலும் அதை சமாளித்து இந்தியாவை தோற்கடிக்க தாங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவிக்கும் அவர் இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
"தற்போது இந்தியா வித்தியாசமான திட்டத்துடன் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளோம். இந்த தொடரில் 5 போட்டிகள் இருக்கிறது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை வைத்து எதையும் நாங்கள் எளிதாக விட்டு விடமாட்டோம் என்று நிரூபித்துள்ளோம். ஏனெனில் அது எங்களுடைய மகத்தான வெற்றிகளில் ஒன்றாகும். தற்போது இத்தொடரை வெல்ல முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.
அதை நிறுத்த தற்போது வித்தியாசமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியாவை நாங்கள் தள்ளி இருக்கிறோம். இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக டாப் அணியான இந்தியா எங்களை தோற்கடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அடுத்த போட்டியில் அவர்கள் எந்த மாதிரியான பிட்ச்சை உருவாக்குவார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் எந்த மாதிரியான பிட்ச்சையும் உருவாக்கும் சக்தி வாய்ந்தவர்கள். இருப்பினும் தற்போது அவர்கள் வித்தியாசமாக சிந்திப்பதற்கான நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.